தமிழர் நீதிக்கட்சி தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் அண்ணன்-தம்பி கைது
தமிழர் நீதிக்கட்சி தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம்:
படுகொலை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரும், கு.வல்லம் கிராமத்தை சேர்ந்த சுபா இளவரசனும் சேர்ந்து விடுதலைப்படை என்ற இயக்கத்தை உருவாக்கி நடத்தி வந்தனர். இந்நிலையில் ராமசாமிக்கும், சுபா இளவரசனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
ேமலும் கடந்த 1,996-ம் ஆண்டு குவாகம் பஸ் நிலையத்தில் நடந்து சென்ற ராமசாமி மீது மிளகாய் பொடியை தூவி, அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழர் விடுதலை படையில் இருந்த சுபா இளவரசன், தமிழர் நீதி கட்சி என்ற அமைப்பை நிறுவி தற்போது நடத்தி வருகிறார்.
அண்ணன்-தம்பி கைது
இவர் கடந்த 10-ந் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வீட்டிற்கு சென்றபோது துளாரங்குறிச்சி அருகே மர்ம நபர்கள் சிலர், அவரது கார் மீது துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசில் சுபா இளவரசன் அளித்த புகாரின்பேரில் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய தமிழ்மறவன்(வயது 30), இளந்தமிழன்(27) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் 2 பேரும் ஏற்கனவே கொலை செய்யப்பட்டவரான ராமசாமியின் மகன்கள் என்பதும், 2 பேரும் தமிழ் தேசிய பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை நிறுவி செயல்பட்டு வருவதாகவும், தங்களது தந்தை படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் சுபா இளவரசன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அவரை கொலை செய்ய முயற்சித்ததும், தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கி கொள்ளையடித்த வழக்கு...
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பத்மநாபன்(48), கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடி அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த கலை என்ற ரவிச்சந்திரன்(51) ஆகிேயார் கும்பகோணம் கோர்ட்டில் சில நாட்களுக்கு முன் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதில் கலை என்ற ரவிச்சந்திரன் மீது 1997-ம் ஆண்டு ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி கொள்ளையடித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் விசாரணையில் உள்ளது விசாரணையின் போது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. பழிக்குப் பழி என்ற நோக்கில் செயல்பட்டதாக தமிழ் தேசிய பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story