திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்
திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேர் மற்றும் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். அரியலூர் மாவட்டத்திலேயே முதல் திருவிழாவாக தொடங்கும் இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 7 கிராம மக்கள் இணைந்து நடத்தும் இந்தத் திருவிழாவின் போது நாள்தோறும் மகாபாரத கதைகளும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் மற்றும் தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கோவிலில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திரவுபதி அம்மன் தேரில் எழுந்தருளினார்.
அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோடும் வீதிகள் வழியாக தீக்குழிக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் தேர் மீண்டும் பக்தர்களால் இழுத்து வரப்பட்டு சன்னதியில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திரவுபதி அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story