போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த சுயேச்சை வேட்பாளர் காங்கிரசில் இணைந்தார்
சுயேச்சை வேட்பாளரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சுயேச்சை வேட்பாளர் நேற்று காங்கிரசில் இணைந்ததால் 2 நாள் பரபரப்பு முடிவுக்கு வந்தது.
கபிஸ்தலம்;
சுவாமிமலை பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி ஏற்பட்டதால். இந்த வார்டில் உள்ள சுயேச்சை வேட்பாளரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சுயேச்சை வேட்பாளர் நேற்று காங்கிரசில் இணைந்ததால் 2 நாள் பரபரப்பு முடிவுக்கு வந்தது.
தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடும் போட்டி
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுவாமிமலை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டு உறுப்பினர் பதவியில் தி.மு.க. சார்பில் 6 பேர் வெற்றி பெற்றனர். அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
அ.தி.மு.க. சார்பில் 6 பேரும், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஒருவரும், சுேயச்சை ஒருவரும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
ஆதரவை திரட்ட தீவிர முயற்சி
தி.மு.க. சார்பில் 6 பேரும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று இருந்ததால் தலைவர் பதவிக்கு மேலும் ஒருவரின் ஆதரவு தேவைப்பட்டது.
அதே நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க அந்த கட்சிக்கு 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒருவரையும், சுயேச்சையாக வெற்றி பெற்ற ஒருவரையும் தங்கள் பக்கம் கொண்டுவர அ.தி.மு.க. முயற்சி மேற்கொண்டது. இரு கட்சிகளும் தங்களது ஆதரவை திரட்டுவதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு
இந்த நிலையில் சுவாமிமலை பேரூராட்சியில் 4-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுசல்யா கடத்தி செல்லப்படலாம் என்ற அச்சம் நிலவியதால் அவரது வீட்டின் முன்பு கடந்த 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் அவரது வீட்டு முன்பு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சுயேச்சை வேட்பாளர் வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
காங்கிரசில் இணைந்தார்
இந்த நிலையில் நேற்று மதியம் கவுசல்யா தனது வீட்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம், தான் சுயவிருப்பத்துடன் வெளியில் செல்வதாகவும், தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை என்றும் கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
சுயேச்சை வேட்பாளர் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றதால் அவர் யாரை சந்திக்க போகிறார்? யாருக்கு ஆதரவு தரப்போகிறார்? என்ற பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் கும்பகோணம் சென்ற சுயேச்சை உறுப்பினர் கவுசல்யா, தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்காண்டார்.
பரபரப்பு முடிவுக்கு வந்தது
சுயேச்சை உறுப்பினராக இருந்த கவுசல்யா, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டதன் மூலம் சுவாமிமலை பேரூராட்சியில் தி.மு.க. கூட்டணியின் பலம் மேலும் உயர்ந்தது. தற்போது தி.மு.க. உறுப்பினர்கள் 6 பேரும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேரும் இருப்பதால் சுவாமிமலை பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க. எளிதாக கைப்பற்றி உள்ளது.
இதன் மூலம் சுவாமிமலை பேரூராட்சியில் கடந்த 2 நாட்களாக நிலவி வந்த பரபரப்பு நேற்று மாலை முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story