11 நாட்கள் நடந்த விசாரணை நிறைவு; ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு - கர்நாடக ஐகோர்ட்டு அறிவிப்பு


11 நாட்கள் நடந்த விசாரணை நிறைவு; ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு - கர்நாடக ஐகோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Feb 2022 2:53 AM IST (Updated: 26 Feb 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் 11 நாட்களாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

பெங்களூரு:

வன்முறை ஏற்பட்டது

  உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அக்கல்லூரி முதல்வர் தடை விதித்து உத்தரவிட்டார். அந்த தடையை மீறி முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். அவர்களை கல்லூரியின் வளாகத்திற்கு வெளியே ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து அவர்கள் அங்கேயே தர்ணா போராட்டம் நடத்தினர்.

  பதிலுக்கு இந்து மாணவர்களும் காவி துண்டு அணிந்து வகுப்புக்கு வந்தனர். இதனால் இருதரப்பு மாணவர்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. கடந்த 8-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தங்களை ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் முஸ்லிம் மாணவிகள் மனுக்களை தாக்கல் செய்தனர்.

11-வது நாளாக விசாரணை

  இந்த மனுக்கள் முதலில் நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அவர் இந்த மனுக்களை தலைமை நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வின் முன்னிலையில் அந்த மனுக்கள் மீது கடந்த 10-ந் தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

  இந்த வழக்கில் மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பிறகு பள்ளி-கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டன. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் 11-வது நாளாக நேற்று அந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. இதில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி ஆஜராகி வாதிட்டார். அவர் நேற்று தனது வாதத்தை நிறைவு செய்தார். மேலும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் சிலர் மீண்டும் வாதிட அனுமதி வழங்குமாறு கேட்டனர்.

மாற்ற முடியாது

  இதையடுத்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரவிவர்மகுமார் வாதிடுகையில், ‘‘சீருடையை முடிவு செய்ய கல்லூரி வளர்ச்சி குழுவுக்கு சட்ட அதிகாரம் கிடையாது. அரசு தனது அதிகாரத்தை வளர்ச்சி குழுவுக்கு மாற்ற முடியாது. அந்த குழுவின் தலைவராக எம்.எல்.ஏ. உள்ளார். அதன் உறுப்பினர்களை அவரே தீர்மானிக்கிறார். இதை ஏற்க முடியாது’’ என்றார்.

  புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சுபாஷ் ஜா வாதிடுகையில், ‘‘ஹிஜாப்புக்காக இவ்வளவு பெரிய கலவரம் நடைபெற சாத்தியமில்லை. இந்த வழக்கை போட்ட மாணவிகள் முன்பு ஹிஜாப் அணியாமல் தான் வகுப்பில் ஆஜராயினர். இதற்கு எங்களிடம் புகைப்படங்கள் ஆதாரமாக உள்ளன. இந்த வழக்கில் வாதாட நாடு முழுவதும் இருந்து மூத்த வக்கீல்களை நியமித்துள்ளனர். சிலருக்கு நிதி உதவி வருகிறது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடைபெற வேண்டும்’’ என்றார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

  அதைத்தொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் மேலும் சில வக்கீல்கள் தங்களின் வாதத்தை எடுத்து வைக்க அனுமதி வழங்குமாறு கேட்டனர். அதற்கு தலைமை நீதிபதி, இந்த வழக்கில் நீங்கள் வாதிட விரும்பும் விஷயங்களை எழுத்து மூலமாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். அத்துடன் இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தது. 

இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து உள்ளது.

Next Story