அடுத்த மாதம் 31-ந்தேதி முதல் பெங்களூரு-கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கம்
அடுத்த மாதம் (மார்ச்) 31-ந்தேதி முதல் பெங்களூரு-கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
இரண்டடுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்
பெங்களூரு-கோவை இடையே இரண்டடுக்கு (டபுள் டெக்கர்) உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பெங்களூரு-கோவை இடையே உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் (மார்ச்) 31-ந்தேதி முதல் இந்த ரெயில் இயக்க உள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதன்கிழமை தவிர...
கோயம்புத்தூர்-கே.எஸ்.ஆர். பெங்களூரு இரண்டடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22666) அடுத்த மாதம் 31-ந்தேதி முதல் கோயம்புத்தூரில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு பெங்களூருவை வந்தடைகிறது.
மறுமார்க்கமாக கே.எஸ்.ஆர். பெங்களூரு-கோயம்புத்தூர் இரண்டடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் (22665) அடுத்த மாதம் 31-ந்தேதி முதல் பெங்களூருவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடைகிறது. இந்த ரெயில் வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயங்கும்.
இந்த ரெயில் இருமார்க்கமாகவும் கோயம்புத்தூர் வடக்கு, திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கே.ஆர்.புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
14 பெட்டிகள் இணைப்பு
டைனிங் வசதியுடன் 2 இரண்டாம் வகுப்பு ஏ.சி. இரண்டடுக்கு சேர் கார் பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு ஏ.சி. இரண்டடுக்கு சேர் கார் பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு சேர் கார் பெட்டிகள் உள்பட 14 பெட்டிகள் இந்த ரெயிலில் இணைக்கப்பட்டிருக்கும்.
Related Tags :
Next Story