346 கன்னட மாணவர்கள் உக்ரைனில் சிக்கித்தவிப்பு - கர்நாடக அரசு தகவல்


346 கன்னட மாணவர்கள் உக்ரைனில் சிக்கித்தவிப்பு - கர்நாடக அரசு தகவல்
x
தினத்தந்தி 26 Feb 2022 3:12 AM IST (Updated: 26 Feb 2022 3:12 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தை சேர்ந்த 346 மாணவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருவதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவம் படிப்பவர்கள் என்றும் கர்நாடக அரசு கூறியுள்ளது.

பெங்களூரு:

346 மாணவர்கள்

  உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இதனால் அங்கு இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அதில் கர்நாடகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்களும் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்பதற்காக கர்நாடக இயற்கை பேரிடர் நிர்வாக ஆணைய கமிஷனர் மனோஜ் ராஜன், கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள கன்னடர்களின் நிலை குறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  உக்ரைனில் சிக்கியுள்ள கன்னடர்களை மீட்கும் பணிகளை நான் ஒருங்கிணைத்து வருகிறேன். இதற்காக உதவி மையத்தை அரசு அமைத்துள்ளது. இந்த உதவி மையத்தை இதுவரை 91 பேர் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களின் விவரங்களை சேகரித்துள்ளோம். அவர்கள் 91 பேரும் அங்கு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்கள். இதுவரை எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி கர்நாடகத்தை சேர்ந்த 346 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவம் படிப்பவர்கள்.

மேலும் உயரக்கூடும்

  இதில் பெங்களூரு நகரை சேர்ந்த 115 பேர், மைசூருவில் 30 பேர், விஜயாப்புராவில் 24 பேர், பாகல்கோட்டையில் 22 பேர், துமகூருவில் 16 பேர், ஹாவேரியில் 14 பேர், தாவணகெரேயில் 12 பேர், சித்ரதுர்காவில் 10 பேர், சிக்கமகளூருவில் 10 பேர், ராய்ச்சூரில் 10 பேர், தட்சிண கன்னடாவில் 9 பேர், கதக், பல்லாரி, தார்வாரில் தலா 6 பேர், கலபுரகியில் 5 பேர், பீதர், ராமநகர், உத்தரகன்னடாவில் தலா 2 பேர், பெங்களூரு புறநகரில் ஒருவர் என மொத்தம் 346 பேர் உள்ளனர். மொத்தம் 29 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர்.

  எங்களுக்கு தொடர்ந்து தகவல் வந்து கொண்டே உள்ளது. அதனால் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். உதவி மையத்தை தொடர்பு கொள்ளும் மாணவர்களுக்கு நாங்கள், ‘‘நீங்கள் பாதுகாப்பாக இருங்கள். உங்களை பத்திரமாக மீட்டு அழைத்துவர துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறுகிறோம்.

  இவ்வாறு மனோஜ் ராஜன் கூறினார்.
  கர்நாடக மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கீவ் நகரில் உள்ள கார்கிவ் என்ற இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

Next Story