ராமநகரில் இருந்து காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை நாளை தொடக்கம் - சித்தராமையா பேட்டி


ராமநகரில் இருந்து காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை நாளை தொடக்கம் - சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 26 Feb 2022 3:17 AM IST (Updated: 26 Feb 2022 3:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநகரில் இருந்து மேகதாது பாதயாத்திரை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்குவதாக சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:

  கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதா அரசுக்கு சாபம்

  கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கான சூழல் நிலவுகிறது. பா.ஜனதா அரசு எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. அதனால் மாநில மக்கள் பா.ஜனதா அரசுக்கு சாபம் விடுக்கிறார்கள்.

  கொரோனா 2-வது அலையின்போது ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த அரசு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ராகுல் காந்தி கர்நாடகத்தை சேர்ந்த 16 தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.

தவறான தகவல்கள்

  நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராவது, அதில் அதிக இடங்களில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வெற்றி வாய்ப்பு உள்ளதால் அனைவரும் பொறுப்புடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் கட்சி பணியாற்ற வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவதாகவும், அதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்றும் தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.

  கருத்து வேறுபாடுகளே இல்லை என்றால் அங்கு ஜனநாயகத்திற்கு அர்த்தமில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட கர்நாடகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற ஆட்சிக்கு வர வேண்டும் என்பது எங்களின் கருத்து.

சட்டசபையில் போராடினோம்

  சிவமொக்காவில் நடந்த கொலையை அடுத்து 144 தடை உத்தரவு போடப்பட்டது. அதை மீறி மந்திரி ஈசுவரப்பா தலைமையில் இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் வன்முறை ஏற்பட்டது. இதனால் ஈசுவரப்பா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் ஈசுவரப்பா தேசிய கொடிக்கு அவமரியாதை செய்தார். அவரை பதவி நீக்கம் செய்ய கோரி நாங்கள் சட்டசபையில் போராடினோம். கவர்னரிடமும் கடிதம் கொடுத்தோம்.

  மேகதாது திட்ட பணிகளை தொடங்க கோரி நாங்கள் கடந்த ஜனவரி 9-ந் தேதி பாதயாத்திரை தொடங்கி நடத்தினோம். கொரோனா பரவல் காரணமாக அதை பாதியில் நிறுத்தினோம். ராமநகரில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்த பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறோம். இந்த பாதயாத்திரை 3-ந் தேதி வரை நடைபெறும்.

  இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story