உக்ரைனில் சிக்கியுள்ள கன்னடர்களை மீட்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் தொலைபேசியில் பேசினேன் - பசவராஜ் பொம்மை பேட்டி
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் தொலைபேசியில் பேசினேன் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
விமான சேவைகள்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்த போர் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன் நாட்டில் இந்தியர்கள் சிக்கி தவிக்கிறார்கள். இதில் கன்னடர்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் கன்னடர்களை பத்திரமாக மீட்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் இன்று(நேற்று) காலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்கள், குறிப்பாக கன்னடர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அந்த நாட்டுடனான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் தரைவழி போக்குவரத்து வசதிகள் மூலம் இந்தியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மீட்பு பணிகள்
உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள இந்திய தூதரகம், அனைத்து மாணவர்களுடனும் தொடர்பில் உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்குமாறும் மத்திய மந்திரியிடம் கூறினேன்.
அங்கு சிக்கியுள்ள கன்னடர்களை தொடர்புகொள்ள மத்திய-மாநில அரசுகள் உதவி மையங்களை திறந்துள்ளன. போர் நிறுத்தப்படும் வரை மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story