குற்றாலத்தில் மயங்கி கிடந்த பெண் சாவு: கைதான கள்ளக்காதலன் மீது கொலை வழக்குப்பதிவு
கைதான கள்ளக்காதலன் மீது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்
தென்காசி:
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே நெடுவயல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி மனைவி செல்ல பொண்ணு (வயது 45). இவர் கடந்த 15-ந் தேதி இரவு குற்றாலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகைக்கு பின்புறம் வாயில் துணியை வைத்து அமுக்கி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து சுற்றுலா மாளிகையின் காவலாளி, குற்றாலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று அந்தப்பெண்ணை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே அந்த பெண் மறுநாள் கண் விழித்துப் பார்த்தார். ஆனால் அவரால் பேச முடியவில்லை. குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் யார்? யாருடன் செல்போனில் பேசினார்? என்று கண்டுபிடித்தனர். அப்போது அவர் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (37) என்பவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
போலீசார் அவரை விசாரணைக்கு குற்றாலம் அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. கடந்த 13-ந் தேதி செல்லபொண்ணு அழைத்ததால் தென்காசி வந்ததாகவும் பின்னர் இங்கிருந்து செல்லபொண்ணு குற்றாலத்திற்கு தன்னை அழைத்துச் சென்றதாகவும் கூறினார். பின்னர் திருமணம் செய்ய வற்புறுத்தி ஊருக்குச்செல்ல வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரப்பட்டு அவரை அடித்து கீழே தள்ளியதில் செல்ல பொன்னு காயம் அடைந்ததும், சத்தம் போடக்கூடாது என்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்து அவரிடம் இருந்த தங்க நகைகளை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கள்ளக்காதலன் சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் செல்லபொண்ணு இறந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story