தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 26 Feb 2022 2:05 PM IST (Updated: 26 Feb 2022 2:05 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

சீரமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர்

சென்னை கொளத்தூர் ஜவஹர் நகர் 68-வது டிவிஷனில் உள்ள 3-வது மெயின் ரோட்டில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து இருப்பது குறித்த செய்தி ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. மின்வாரிய அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்பட்டு உள்ளது. துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்துக்கும் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.



விஷமாகும் குடிநீர், தீர்வு கிடைக்குமா?

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பெரியவிப்பேடு கிராமத்தில் குடிநீர் கிணறு ஒன்று பயன்பாட்டில் உள்ளது. கிணறு மூடி இல்லாமல் திறந்த நிலையில் இருப்பதால் பல்லி, பாம்பு போன்ற உயிரினங்கள் உள்ளே விழுந்து குடிநீர் மாசுபடுவதோடு விஷதன்மையாகவும் மாறிவருகிறது. இதனால் இந்த கிணற்று நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதையடுத்து அப்பகுதிமக்கள் குடிநீருக்காக வேறு இடத்திற்கு சென்று வருகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு செய்து இதற்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.

- தமிழ்பிரியன், பெரியவிப்பேடு.

குண்டும் குழியுமான சாலை

சென்னை பெரம்பூரில் உள்ள பேரக்ஸ் சாலை நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பள்ளம்போல இருப்பதால் போக்குவரத்து, பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. விபத்து எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டும்.

- வாகன ஓட்டிகள்.



விபரீதம் தடுக்கப்படுமா?

சென்னை பெரம்பூர் மங்களபுரம் கிருஷ்ணதாஸ் சாலை 4-வது தெருவில் உள்ள கழிவுநீர் வடிகால்வாயின் மூடி சரியாக மூடப்படாத நிலையில் தூக்கியவாறு இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு தீர்வு காணப்படுமா?

- பொது மக்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை வரதராஜபுரம் ராஜீவ்காந்தி தெருவில் மின்கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு வரும் மின்சார வயர்கள் சில வீடுகளின் மாடிப்பகுதியை ஒட்டி செல்வதால் வீட்டின் மொட்டை மாடிகளில் குழந்தைகள் விளையாடும் போதும், ஆட்கள் நிற்கும் போதும் எதிர்பாராத விதமாக தொட்டுவிடும் அபாயம் உள்ளது. மேலும் சில மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் சாய்ந்தவாறு இருக்கின்றன. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு முன்எச்சரிக்கையாக மின்வாரியம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

- கோதை ஜெயராமன், நசரத்பேட்டை.



எரியாத மின் விளக்குகள்; மின்வாரியம் கவனிக்குமா?

சென்னையை அடுத்த தாம்பரம் மீனாட்சி தெருவில் உள்ள தெரு விளக்குகள் கடந்த சில நாட்களாக எரிவதில்லை. இதனால் இரவில் வெளியே பணிக்கு செல்வோர், வேலை முடிந்து வீடு திரும்புவோர் என இருளில் பயணிக்கும் பொது மக்கள் அவதிப்படும் சூழல் நிலவுகிறது. மின்வாரியம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொது மக்கள், மீனாட்சி தெரு.

செயல்படாத சுத்திகரிப்பு நிலையம்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை, பேரமனூர் எம்.ஜி.ஆர். தெருவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று உள்ளது. இது கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருக்கிறது. இந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்பட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- ஊர் மக்கள்.



திறந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

திருவள்ளூர் மாவட்டம் வடபெரும்பாக்கம் ஸ்ரீரங்கா கூட்டுறவு நகரில் உள்ள மின் இணைப்பு பெட்டி எப்போதும் திறந்த நிலையிலேயே இருக்கிறது. குழந்தைகள் விளையாடும் பகுதி மட்டுமல்லாமல் கால்நடைகள் அதிகம் நடமாடும் இடம் என்பதால் மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.

- சாலைவாசிகள்.

உடைந்த குடிநீர் குழாய்

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி செல்லும் வழியில் உள்ள ஐஸ்வர்யா நகரில் சாலையை ஒட்டி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் அருகில் இருக்கும் கழிவுநீருடன் கலந்து வீணாகிறது. அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு குடிநீர் குழாயை சரி செய்து தர வேண்டும்.

- ஊர் மக்கள்.

நூலகம் சீரமைக்கப்பட வேண்டும்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. தற்போது இந்த நூலகம் போதிய பராமரிப்பின்றி இருப்பதால் கட்டிடத்தின் மேலே செடி கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடம் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் இருக்கிறது. தினமும் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற்றும் வரும் இந்த நூலகத்தை, முழுவதும் சேதாரம் அடையும் முன்பு சீரமைத்து தர வேண்டும்.

- பொதுமக்கள்.



Next Story