திருத்தணி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
சேமிப்பு கிடங்கில் நடந்த தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.
திருத்தணி அரக்கோணம் சாலையில் வசிப்பவர் ரத்தினம் (வயது 45). இவர் அதே பகுதியில் காலி இடத்தை வாடகை எடுத்து காயலாங்கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் சேமிப்பு கிடங்கில் ஏராளமான பாட்டில்கள், இரும்பு சாமான்கள், அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடுக்கி வைத்திருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்து கரும்புகை வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். மேலும், திருத்தணி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகமாக தீ பரவியதால் கூடுதலாக அரக்கோணத்தில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனம் வரவைக்கப்பட்டது. பின்னர் 4 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story