மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய தொழிலாளி சாவு


மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 26 Feb 2022 8:01 PM IST (Updated: 26 Feb 2022 8:01 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து உயிருக்கு போராடி உயிரிழந்தார்.இதற்கு ஆம்புலன்ஸ் வராததே காரணம் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

கூடலூர்

கூடலூர் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து உயிருக்கு போராடி உயிரிழந்தார்.இதற்கு ஆம்புலன்ஸ் வராததே காரணம் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டினர். 

மயங்கி விழுந்த தொழிலாளி

கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலையில் உள்ள குரும்பர்பாடி ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் மாதன் என்ற பால்ராஜ்(வயது 62). தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.  

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் டீசல் இல்லாததால் ஆம்புலன்ஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது. 

சாவு

வெகுநேரம் காத்திருந்துவிட்டு, உயிருக்கு போராடிய அவரை தனியார் ஜீப்பில் ஏற்றி சூண்டி பகுதிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால்தான் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர காலதாமதம் ஏற்பட்டதாக கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் வராததை கண்டித்து உயிரிழந்த மாதன் குடும்பத்தினர் மற்றும் எல்லமலை கிராம மக்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றனர். ஆனால் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. இல்லை. 

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனால் அவரது நேர்முக உதவியாளர் கோமதியிடமும், தாசில்தார் சித்ராஜியிடமும் புகார் மனு அளித்தனர். அதில், உரிய நேரத்தில் ஆம்புலன்சை கொண்டு வராத டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.  

இது தொடர்பாக வருகிற 28-ந் தேதி ஆர்.டி.ஓ. தலைமையில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது, எல்லமலை பகுதியில் நிரந்தரமாக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story