40 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


40 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 26 Feb 2022 8:23 PM IST (Updated: 26 Feb 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர் சந்தித்தனர்.

சின்னாளப்பட்டி:

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழகத்தில், கடந்த 1980-ம் ஆண்டு வேளாண்மை பாடப்பிரிவில் 2 ஆண்டு பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டது. அந்த பாடப்பிரிவில் முதன் முதலாக சேர்ந்த 60 மாணவ-மாணவிகள், 2 ஆண்டு கால படிப்பை முடித்து 1982-ம்   ஆண்டில் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரியாவிடை பெற்றனர். 

40 ஆண்டுகள் கடந்த நிலையில், இவர்கள் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தில் இந்த நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த சந்திப்பில் 35 பேர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் 60 வயதை கடந்தவர்கள் ஆவர். 

படிப்பை முடித்த பலர் தமிழக வேளாண்மை துறையில் இணை இயக்குனர், உதவி இயக்குனர் வரை பதவி வகித்து ஓய்வு பெற்றவர்கள். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வேளாண்மை அலுவலராக பணியில் சேர்ந்து, மேலாளராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர்களும் அடங்குவர். இன்னும் ஒரு சிலர், வேளாண்மை சார்ந்த வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள். 

40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த அனுபவத்தை அவர்கள் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர். சிலர் தங்களது பழைய நண்பர்களைஅடையாளம் காண்பதில் சிரமப்பட்டனர். ஒருவரையொருவர் கட்டித்தழுவி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 சிறுதானியங்களால் தயார் செய்த உணவு பரிமாறப்பட்டது. இந்த சந்திப்பின் போது பலர் தங்களது பேரன்-பேத்திகளுடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் (பொறுப்பு) ரங்கநாதன், பதிவாளர் சிவக்குமார், முன்னாள் பேராசிரியர்கள் குருவம்மாள், கோபால், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். 

Next Story