திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 37 அடியாக சரிந்ததால் விவசாயிகள் கவலை
திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 37 அடியாக சரிந்ததால் விவசாயிகள் கவலை
தளி,
திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 37 அடியாக சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருமூர்த்தி அணை
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படுகின்ற நீராதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, கணக்கம் பாளையம், பூலாங்கிணர், கொமரலிங்கம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
37 அடியாக குறைந்தது
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழையும் அதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்தது. இதன் காரணமாகவும் காண்டூர் கால்வாயில் தொடர் நீர்வரத்து ஏற்பட்டதாலும் அணை அதன் முழு கொள்ளளவில் நீடித்து வந்தது. அதைத் தொடர்ந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது 3-ம் சுற்று தண்ணீர் சென்று கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீர் இருப்பு படிப்படியாக குறைந்து 37 அடியில் நீடித்து வருகிறது.
காண்டூர் கால்வாயில் வந்து கொண்டுள்ள தண்ணீருடன் கூடுதலாக சுமார் 300 கனஅடி தண்ணீரை பாசனம் மற்றும் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கவலை
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலவுகின்ற கடும் வெப்பத்தால் ஆறுகளில் நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேபோன்று பாசனப்பரப்புகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பயிர்களுக்கான தண்ணீர் தேவையும் அதிகரித்து வருகிறது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 37.35 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 753 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,086 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story