தோட்டத்தில் பயங்கர தீ; மாமரங்கள் எரிந்து நாசம்


தோட்டத்தில் பயங்கர தீ; மாமரங்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 26 Feb 2022 9:44 PM IST (Updated: 26 Feb 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தனியார் தோட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் மாமரங்கள் எரிந்து நாசமானது.

கூடலூர்:
கூடலூர் அருகே தனியார் தோட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் மாமரங்கள் எரிந்து நாசமானது. 
தோட்டத்தில் தீ
தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மா, புளி, இலவம் மரங்களை நட்டு வளர்த்து வருகின்றனர். இதேபோல் கூடலூர் அருகே தம்மணம்பட்டிபுலம் பகுதியில் தர்மராஜ் என்பவர் தனக்கு சொந்தமான 12 ஏக்கர் தோட்டத்தில் மா மரங்களை வளர்த்து வருகிறார். அருகில் முருகன் என்பவருக்கும் சொந்தமான தென்னந்தோப்பும் உள்ளது. 
இந்தநிலையில் தர்மராஜ் தோட்டத்தில் இருந்த காய்ந்துபோன புற்களில் நேற்று தீப்பற்றி எரிந்தது. அந்த தீ மேலும் பரவி மாமரங்களிலும் பற்றியது. இதில் மா மரங்கள் எரிந்தன. மேலும் அருகில் உள்ள தென்னந்தோட்டத்திற்கும் தீப்பரவியது. 
மரங்கள் எரிந்தன
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கம்பம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், தோட்டத்தில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் தர்மராஜ் தோட்டத்தில் இருந்த 200-க்கும் மேற்பட்ட மா மரங்கள் மற்றும் முருகனின் தோட்டத்தில் இருந்த 3 தென்னை மரங்கள் 3 எரிந்து நாசமானது. 
இதனால் விவசாயிகள், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கவலை தெரிவித்தனர். எனவே தங்களுக்கு நிவாரணம் மற்றும் இலவசமாக மா, தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும் என்று வேளாண் துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story