தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்தினருடன் தர்ணா போராட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். விவசாயி. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் தர்மபுரி மாவட்டம் நரிப்பள்ளி அருகே இருப்பதாக கூறப்படுகிறது. வேடியப்பன் பெயரில் பட்டா உள்ள அந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் ஒருவர் தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வேடியப்பன், குடும்பத்தினர், உறவினர்களுடன் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது போலி ஆவணம் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story