நடராஜர் கோவிலை முற்றுகையிட விடாமல் போலீசார் தடுத்ததால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 118 பேர் கைது


நடராஜர் கோவிலை முற்றுகையிட விடாமல் போலீசார் தடுத்ததால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்  118 பேர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2022 10:42 PM IST (Updated: 26 Feb 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

நடராஜர் கோவிலை முற்றுகையிட விடாமல் போலீசார் தடுத்ததால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 118 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


சிதம்பரம், 

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வழிபட சென்ற பெண் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி, சாதி தீண்டாமை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கோவில் தீட்சிதர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். தனி சட்டம் இயற்றி நடராஜர் கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

சிற்றம்பல மேடையில் அனைத்து பக்தர்களும் இலவசமாக வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட நிர்வாகக்குழு சேகர் தலைமையில் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலை முற்றுகையிட வடக்கு வீதியில் உள்ள தபால் நிலையம் அருகில் இருந்து கோவிலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

118 பேர் கைது

அப்போது சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையிலான போலீசார், வடக்கு வீதி பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை தடுத்து நிறுத்தினர். இதனால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, மாவட்டக்குழு சித்ரா, மாநில நிர்வாகக்குழு மணிவாசகம், மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணை செயலாளர் குளோப் உள்பட 118 பேரை போலீசார் கைது செய்து, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Next Story