‘கால் டாக்சி’ ஒப்பந்தம் எடுத்து தருவதாக கூறி ஓட்டல் ஊழியரிடம் ரூ.25¾ லட்சம் மோசடி தம்பதி கைது


‘கால் டாக்சி’ ஒப்பந்தம் எடுத்து தருவதாக கூறி ஓட்டல் ஊழியரிடம் ரூ.25¾ லட்சம் மோசடி தம்பதி கைது
x
தினத்தந்தி 26 Feb 2022 10:49 PM IST (Updated: 26 Feb 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

கால் டாக்சி ஒப்பந்தம் எடுத்து தருவதாக கூறி ஓட்டல் ஊழியரிடம் ரூ.25¾ லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.


கடலூர், 

கடலூர் வண்டிப்பாளையம் அப்பர் சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். 

கடந்த 2018-ம் ஆண்டு அந்த ஓட்டலுக்கு வந்த நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த புதுமந்து பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராஜ் என்கிற காந்தராஜ் (39), இவருடைய மனைவி கோகிலா என்கிற சாய்பிரியா (37) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ராஜ், கோகிலா ஆகியோர் தாங்கள் சொந்தமாக கோயம்புத்தூரில் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருவதாகவும், தற்போது கோயம்புத்தூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஒப்பந்தம் எடுக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும், அதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் நீங்களும் பார்ட்னராக சேருங்கள் என ஆறுமுகத்திடம் கூறியுள்ளனர்.

ரூ.25¾ லட்சம்

பின்னர் இருவரும் தற்போது தங்களிடம் பணம் இல்லை எனவும், மொத்த பணத்தையும் நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் பெயரிலேயே ஒப்பந்தம் எடுப்பதாக கூறியுள்ளார்கள். 

இதை நம்பிய ஆறுமுகம், அவர்கள் இருவரும் கூறிய 15 வங்கி கணக்குகளில் 19.6.2018 முதல் 28.11.2020 வரையிலான காலங்களில் ரூ.25 லட்சத்து 80 ஆயிரத்து 580 வரை செலுத்தியுள்ளார்.

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ராஜ், கோகிலா ஆகியோர் ஆறுமுகம் பெயரில் ஒப்பந்தம் எடுக்காமல், அவர்களது பெயரிலேயே ஒப்பந்தம் எடுத்து மோசடியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆறுமுகம், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தம்பதி கைது

இதுகுறித்து ஆறுமுகம் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராஜ், கோகிலா ஆகியோர் புதுச்சேரியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் புதுச்சேரிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த காந்தராஜ், கோகிலா ஆகியோரை கைது செய்தனர்.

Next Story