300 விவசாயிகள் பண்ணை குட்டை அமைக்க விண்ணப்பித்துள்ளனர்-கலெக்டர் தகவல்


300 விவசாயிகள் பண்ணை குட்டை அமைக்க விண்ணப்பித்துள்ளனர்-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 26 Feb 2022 11:04 PM IST (Updated: 26 Feb 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டில் 300 விவசாயிகள் பண்ணைக்குட்டைகள் அமைக்க விண்ணப்பித்துள்ளார்கள் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டில் 300 விவசாயிகள் பண்ணைக்குட்டைகள் அமைக்க விண்ணப்பித்துள்ளார்கள் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

கலெக்டர் பார்வையிட்டார்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர் வாணியங்குடி, வந்தவாசி, மாங்குடி தெற்குவாடி, இடையமேலூர், ஒக்கப்பட்டி, அழகமானேரி ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் விளை நிலத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ப உள்ளுரில் வேலை தேர்வு செய்து பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் விவசாயப்பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில், தேசிய ஊரக உறுதித்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விளைநிலங்களை சீரமைத்துக் கொடுத்தல், வரப்புக்கட்டும் பணி மேற்கொள்ளுதல் போன்றப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

300 விவசாயிகள்

 மேலும் விவசாயிகளுக்கு விளைநிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்துக் கொடுக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் நடப்பாண்டில் விவசாயிகள் 300 பண்ணைக்குட்டைகள் அமைத்திட விண்ணப்பித்துள்ளார்கள். ஒவ்வொரு பண்ணைக்குட்டையும் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் பண்ணைக்குட்டைகள் அமைத்து வழங்கப்படுகின்றன. 
விளைநிலங்களில் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, அதில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் போது மழைநீர் மற்றும் விளை நிலங்களில் பயன்படுத்த உபரிநீர் பண்ணைக்குட்டையில் தேங்கி நிற்பதன் மூலம் கோடைக்காலங்களில் பயிர்களுக்கு கடைசி நிலையில் தேவைப்படும் தண்ணீருக்கு இந்த பண்ணைக்குட்டைகள் பயன்தரக் கூடியதாக அமையும். இத்துடன் பண்ணைக்குட்டையின் மூலம் தண்ணீர் தேக்கி வைப்பதால் அதனைச்சுற்றியுள்ள ஆழ்துளைக்கிணறுகள் மற்றும் கிணறுகள் ஆகியவற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இத்திட்டத்தை பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பித்து எவ்விதச் செலவுமின்றி பயன்பெறலாம். 
இவ்வாறு அவர் கூறினார். 
இந்த ஆய்வின்போது, தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், மற்றும் அதிகாரிகள் உடன்சென்றனர்.

Next Story