நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் உக்ரைனில் தவிப்பு மீட்டு வர மாவட்ட நிர்வாகம் முயற்சி


நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் உக்ரைனில் தவிப்பு மீட்டு வர மாவட்ட நிர்வாகம் முயற்சி
x
தினத்தந்தி 26 Feb 2022 11:20 PM IST (Updated: 26 Feb 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் உக்ரைனில் தவிப்பு மீட்டு வர மாவட்ட நிர்வாகம் முயற்சி

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் உக்ரைனில் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை இந்தியா மீட்டு வர மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
5 மாணவ, மாணவிகள் தவிப்பு
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வருவதால் அங்கு தங்கியுள்ள இந்திய மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் மருத்துவ படிப்புக்கு சென்ற 5 மாணவ, மாணவிகள் அங்கு தவித்து வருகின்றனர். அவர்களை விரைவில் மீட்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி நாமக்கல் அருகே உள்ள வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த சேகர் மகன் சரவணன், மருக்கலாம்பட்டி புதூர் நடேசன் மகன் வினோத்குமார், திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி மாம்பாளையம் முத்துசாமி மகள் ஜனனி, ராசிபுரம் அண்ணா சாலை ராமன் மகள் நர்மதா, குமாரபாளையம் வட்டமலை இளங்கோ மகன் சூர்யா ஆகிய 5 மாணவ, மாணவிகள் உக்ரைன் நாட்டில் உள்ளனர். அவர்களை மீட்டு வரும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
உதவி எண்கள் வெளியீடு
இதற்கிடையே மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உக்ரைன் நாட்டில் இருப்பின் உதவிக்கு நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண் 1077, 04286 281377 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். மேலும் கலெக்டரின் நேர்முக உதவியாளரை (பொது), 94450 08144 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story