ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 45 பேர் காயம்
ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதனை பிடிக்க முயன்ற 45 பேர் காயமடைந்தனர்.
ஆலங்குடி,
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் முனீஸ்வரன் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதற்காக கோவில் அருகே திடல் அமைக்கப்பட்டிருந்தது. புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். மொத்தம் 800 காளைகள் வந்திருந்தன. இதேபோல் புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் 300 பேர் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டினை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் கவிதாராமு தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன்பின் முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டன. இதனை மாடு பிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு காளைகளை அடக்கினர்.
45 பேர் காயம்
ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து சில காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதனை கண்ட மாடுபிடி வீரர்கள் அச்சத்தில் ஓரமாக தடுப்பு கம்பியில் ஏறி நின்றதை காணமுடிந்தது. சிலர் தைரியமாக திமிலை பிடித்து அடக்க முயன்றனர். காளைகளும் களத்தில் ரவுண்டு கட்டி சுற்றி, சுற்றி வந்து அசத்தின. சிலரை கொம்பால் தூக்கி வீசி புரட்டி போட்டது.
காளைகளை அடக்க முயன்றதில் 45 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவக்குழுவினரும் முகாம் அமைத்து சிகிச்சை அளித்தனர்.
பரிசுகள்
ஜல்லிக்கட்டை காண சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் ரசித்து பார்த்தனர். சிலர் மரங்களின் மேல் ஏறி நின்றும் கண்டு களித்தனர். மாடுகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம், கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தநிகழ்ச்சியில் இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் முனைவர் எஸ்.கே.மிட்டல், எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, சின்னதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வடமாடு மஞ்சுவிரட்டு
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சந்தன காப்பு திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், 13 காளைகள் கலந்து கொண்டன. இதேபோல் மாடுபிடி வீரர்கள் 13 பேர் கலந்து கொண்டனர்.
காளியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் ஒவ்வொரு மாடுகளையும் அடக்குவதற்கு 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. 9 பேர் கொண்ட குழுவினர் மாடுகளை அடக்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர். மேலும், அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க செம்பட்டிவிடுதி மற்றும் ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story