பா.ஜனதா மாநில அரசுகளை நசுக்குகிறது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பா.ஜனதா மாநில அரசுகளை நசுக்குவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டி உள்ளார்.
மும்பை,
மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பா.ஜனதா மாநில அரசுகளை நசுக்குவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டி உள்ளார்.
ரெய்டுக்கு மேல் ரெய்டுகள்
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே லோக்சத்தா மராத்தி பத்திரிகை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
மத்திய விசாரணை முகமைகள் மராட்டியம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மட்டும் தான் பணி செய்து வருகின்றன. ரெய்டுகள் மூலம் மராட்டியத்தை களங்கப்படுத்தும் முயற்சிகள் கண்டனத்திற்குரியது. எல்லோருக்கும் ஒரு காலம் வரும். ஆனால் அது மாறக்கூடியது. மராட்டியத்தில் நடக்கும் சோதனைகள் அரசியல் தான். இதை வேறு எப்படி பார்க்க முடியும். மராட்டியம் மற்றும் மேற்கு வங்காளம் தவிர பிற மாநிலங்களில் மத்திய முகமைகள் இல்லை என்பது போல தான் தெரிகிறது.
குஜராத்தில் மிகப்பெரிய மோசடி, போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் மராட்டியத்தில் சிறிய அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டால் மாநிலம் முழுவதும் கட்டிடங்களின் மொட்டை மாடிகளில் கஞ்சா விளைய வைப்பது போலவும், எல்லா ஊழல்களும் இங்கு தான் நடப்பது போல பெரியதாக்கப்படுகிறது. ரெய்டுக்கு மேல் ரெய்டுகள். நாட்டின் கெட்டுப்போன பகுதி போல மராட்டியம் நடத்தப்படுகிறது.
நாட்டின் அரசியலை அழித்துவிடும்
பா.ஜனதா மத்தியில் ஆட்சியில் இருப்பதால் மாநில அரசுகளை நசுக்குகிறது. எல்லோருக்கும் அவர்களுக்கான காலம் வரும். எப்போதும் எல்லாம் ஒரே மாதிரி இருக்காது என்பதையும் ஒருவர் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர விரும்பும்.
ஆனால் அதற்காக தேவையில்லாத போதும் மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது மத்திய, மாநில அரசு இடையே சிக்கலை ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகளை தாக்கலாம், ஆனால் நாம் ஜனநாயக நாடு என்பதை மறந்துவிட வேண்டாம். மக்கள் முன்னால் சென்று வெற்றி பெறுங்கள். எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற மனநிலை, நாட்டின் அரசியலை அழித்துவிடும். மக்கள் நலனுக்காக தான் உங்களுக்கு மத்தியில் ஆட்சி கொடுக்கப்பட்டது தவிர, ஆதரமற்ற குற்றச்சாட்டுகளால் எதிர்க்கட்சிகளின் பெயரை கெடுத்து நான் தான் கங்கை நதியில் குளித்தது போல சுத்தமானவன் என காட்டிக்கொள்ள அல்ல.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.
Related Tags :
Next Story