உக்ரைனில் சிக்கி தவிக்கும் கன்னடர்களை பத்திரமாக மீட்போம் என மத்திய அரசு உறுதி - பசவராஜ் பொம்மை தகவல்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் கன்னடர்களை பத்திரமாக மீட்போம் என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
உதவி மையம்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்த போர் தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால் உக்ரைன் நாட்டில் இந்தியவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். கர்நாடகத்தை சோந்த 346 பேரும் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலும் டாக்டர் படிக்க சென்ற மாணவ, மாணவிகள் ஆவார்கள். இதையடுத்து, அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை, கர்நாடகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் கன்னடர்களுக்கு உதவியாக 24 மணிநேரமும் செயல்படும் வகையில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்திற்கு வரும் தகவல்கள் உடனுக்குடன் வெளியுறுவுத்துறை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினமும் உதவி மையத்தை தொடர்பு கொண்டு உக்ரைனில் சிக்கி இருப்பவர்களும், கர்நாடகத்தில் வசிக்கும் உறவினர்களும் தகவல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 24-ந் தேதி மட்டும் 431 பேர் உதவி மையத்தை தொடர்பு கொண்டனர்.
மத்திய மந்திரி உறுதி
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் கன்னடர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி நேற்று முன்தினம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசி இருந்தார். இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உக்ரைனில் சிக்கி இருக்கும் கன்னடர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று மத்திய வெளியுறுவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உறுதி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், உக்ரைனில் சிக்கியுள்ள கன்னடர்களை மீட்கும் விவகாரத்தில் கர்நாடக அரசு உதவி மையத்தை தொடங்கி இருக்கிறது. பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் கன்னடர்கள் திரும்பி வருவார்கள். முதல்-மந்திரி அலுவலகம், மத்திய வெளியுறவுத்துறை அலுவலகத்துடன் எந்த நேரமும் தொடர்பில் இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story