கர்நாடகத்தில் போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது
கர்நாடகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பெங்களூருவில் நடைபெறும் முகாமில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு:
போலியோ சொட்டு மருந்து
நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதுபோல், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 198 வார்டுகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பெங்களூருவில் ஒட்டு மொத்தமாக 10 லட்சத்து 80 ஆயிரத்து 104 குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட தகுதியானவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக மாநகராட்சி சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பசவராஜ் பொம்மை தொடங்கி...
இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பெங்களூருவில் பிப்ரவரி 27-ந் தேதி (அதாவது இன்று) முதல் வருகிற 2-ந் தேதி வரை போலியோ விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. நாளை (இன்று) பெங்களூருவில் 10 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகள், பஸ், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பெங்களூரு டவுன்ஹால் அருகே உள்ள தாசப்பா அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறும் முகாமில் காலை 8.45 மணியளவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைக்க உள்ளார்,’’ என்றார்.
Related Tags :
Next Story