சேலம் அரிசிபாளையத்தில் கோவிலை இடிக்காமல் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்


சேலம் அரிசிபாளையத்தில் கோவிலை இடிக்காமல் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 27 Feb 2022 3:30 AM IST (Updated: 27 Feb 2022 3:30 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரிசிபாளையத்தில் கோவிலை இடிக்காமல் இணைப்பு சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம், 
இணைப்பு சாலை
சேலம் 4 ரோடு பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்வதற்கு பாலத்தின் அடிப்பகுதியில் இணைப்பு சாலை உள்ளது. ஆனால் 4 ரோட்டில் இருந்து அரிசிபாளையம் வழியாக இடதுபுறமாக செல்லும் வழியில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை அரிசிப்பாளையம் மற்றும் பெரமனூர் பகுதியில் வசிக்கும் மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர்.
இதனிடையே, மேம்பாலம் அமைத்து இணைப்பு சாலை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான இடத்தை நெடுஞ்சாலைத்துறை சார்பில் கையகப்படுத்தி அங்குள்ள கோவிலை அப்புறப்படுத்தவும் அதற்குண்டான தொகையை சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கோவில் அகற்றப்படாமல் உள்ளது. ஆனால் அந்த வழியாக கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் சென்று வருகின்றன.
பொதுமக்கள் எதிர்ப்பு
இந்நிலையில், காளியம்மன் கோவில் அமைந்துள்ள இருபுறத்திலும் நேற்று மாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை போடுவதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் ரோடு ரோலர் வாகனம் மூலம் சாலையை தோண்டி தார்சாலை போடும் பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்தவுடன் அங்கு வசிக்கும் சிலர், தார்சாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், கோவிலை அப்புறப்படுத்திவிட்டு தார்சாலை போட வேண்டும் என வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Next Story