இணைப்பு திட்டம்: “தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும்” சபாநாயகர் அப்பாவு உத்தரவு
தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும்” என்று சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்
நெல்லை:
“நெல்லை அருகே நதிநீர் இணைப்பு திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும்” என்று சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
பாலம் கட்டும் பணி
தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் உபரியாக கலக்கும் 14 மில்லியன் கனஅடி நீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக தாமிரபரணி -கருமேனியாறு -நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 4 கட்டமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 75 கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய் வெட்டப்படுகிறது.
இதில் 2-வது கட்டத்தில் முழுமையாக பணிகள் முடிந்த போதிலும் தாமிரபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கின்போது தண்ணீரை கொண்டு செல்ல முடியவில்லை. நெல்லை அருகே பொன்னாக்குடியில் கன்னியாகுமரி நான்குவழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையும், அதன் அருகில் ரெயில்வே பாலமும் குறுக்கே அமைந்துள்ளது.
இதையடுத்து தண்ணீரை கொண்டு செல்ல துளை அமைக்கும் வகையில் பாலம் கட்டப்படுகிறது. இதற்காக தமிழக பொதுப்பணி நீர்பாசனத்துறை சார்பில் குறிப்பிட்ட இடத்தில் 6 வழிப்பாலம் கட்டுவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ரூ.17.09 கோடி செலுத்தப்பட்டது.
சபாநாயகர் ஆய்வு
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த பணி தொடங்கி வைக்கப்பட்டது. அங்கு ஒரு பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு, பாலம் கட்டுவதற்கான மண் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை சபாநாயகர் அப்பாவு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலம் கட்டுமான பணியில் தற்போது உள்ள நிலை, எப்போது முடிவடையும் போன்ற தகவல்களை அதிகாரிகளுடன் கேட்டு ஆலோசனை நடத்தினார். பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது 2006-ம் ஆண்டில் தாமிரபரணி ஆற்றில் ஆண்டு தோறும் மழை காலத்தில் உபரியாக கடலுக்கு செல்லும் 20 முதல் 50 டி.எம்.சி. தண்ணீரை வறட்சி பகுதிகளான நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம் தாலுகா பகுதிகளுக்கு கொண்டு செல்ல நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினார்.
இதற்காக அப்போது ரூ.361 கோடி ஒதுக்கீடு செய்து 2009-ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு வரை ரூ.215 கோடி விடுவிக்கப்பட்டு பாதி பணிகள் முடிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு மீதி பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க பணிகளை விரைவு படுத்தி உள்ளார்.
கட்டுமான பணி தாமதம்
இதில் பொன்னாக்குடியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே 6 வழிச்சாலை பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு 10 மாத காலமாக பள்ளம் தோண்டும் பணி மட்டுமே நடந்து வருகிறது. பாலம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. நவீன தொழில்நுட்பம் இருக்கும் காலத்தில் பெரிய பாறை இருப்பதாக கூறி காலம் கடத்தி வருகிறார்கள்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தினசரி பார்வையிட்டு இந்த பணியை துரிதப்படுத்த வேண்டும். அதற்காக ஆய்வு செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்.
3, 4-வது கட்ட பணிகள்
இதே போல் 3-வது கட்டத்தில் 4 பணிகளும், 4-வது கட்டத்தில் 3 பணிகளும் தாமதம் ஆகி வருகிறது. அந்த பணியை ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் மூலம் பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும். மொத்தம் 7 பணிகள் தாமதம் ஆகி இருப்பது வேதனை அளிக்கிறது. அவற்றை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது கவனத்துக்கு கொண்டு செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் ஆசைத்தம்பி, செயற்பொறியாளர் திருமலைக்குமார், மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் நாகராஜன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமன் டேவிட், பாஸ்கரன் மற்றும் விவேகானந்த பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
புதிய பஸ் இயக்கம்
கூடங்குளத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பொது மக்களுக்காகவும், பள்ளிகள்-கல்லூரிகளில் படித்து வரும் மாணவிகளுக்காகவும் இலவச மகளிர் அரசு பஸ் போக்குவரத்தை சபாநாயகர் அப்பாவு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ் கூடங்குளம், செட்டிகுளம், அஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரி செல்லும். மகளிர் இலவசமாக செல்லும் பஸ் இதுவாகும். இந்த நிகழ்ச்சி கூடங்குளத்தில் நடந்தது. இதில் மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு, ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், ஹரி, முத்தரசு, பஞ்சாயத்து உறுப்பினர்கள் சுதா, அன்பரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதற்காக பொதுமக்கள் சபாநாயகருக்கு நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story