அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமே வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும்; மத்திய வெளியுறவு அமைச்சகம் சென்னையில் விழிப்புணர்வு
அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவே வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் சென்னையில் விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடைபெற்றது.
விழிப்புணர்வு நடைபயணம்
வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு செல்வோர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் மட்டுமே செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசின் புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு பாதுகாப்பாக...’ என்ற தலைப்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடைபெற்றது.
இந்த பேரணியை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். இதில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (சென்னை கிளை) குடிபெயர்வோர் பாதுகாவலர் எம்.வெங்கடாச்சலம், தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் டாக்டர் ராஜமூர்த்தி, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குனர் பி.குருபாபு, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் பெசன்ட் நகர் நடைபயிற்சியாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இணையதள முகவரி
நிகழ்ச்சியில் எம்.வெங்கடாச்சலம் பேசியதாவது:-
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை மட்டுமே அணுக வேண்டும். முறையான ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டுமே அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தாலும், தமிழ்நாடு, டெல்லியில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகத்தாலும் உதவி செய்ய முடியும்.
அங்கீகாரம் இல்லாத முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகம் நேரடியாக தீர்வு காண இயலாது. அத்தகைய புகார்களை விசாரித்து போலீஸ்துறை, நீதிமன்றம் போன்றவற்றின் உதவியுடன் மட்டுமே தீர்த்து வைக்க முடியும். இதுபோன்று தினமும் 30-க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் பட்டியலை www.emigrate.gov.inஎன்ற இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
டாக்டர் ராஜமூர்த்தி பேசும்போது, வெளிநாடு செல்பவர்களுக்கு அந்தந்த நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் வழங்குகிறது’ என்றார்.
Related Tags :
Next Story