சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை


சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Feb 2022 7:25 PM IST (Updated: 27 Feb 2022 7:25 PM IST)
t-max-icont-min-icon

சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிங்கப் பெருமாள் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்வாய் பணிகள்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்டது திருத்தேரி கிராமம். இந்த கிராமம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது. அங்கு கடந்த சில மாதங்களாக 6 வழிச்சாலை விரிவாக்கத்திற்காக கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது திருத்தேரி பிள்ளையார் கோவில் தெருமுனையில் பள்ளம் தோண்டப்பட்டது.

இங்கு கால்வாய் அமைக்கும் பணி 80 சதவீத முடிந்த நிலையில் பிள்ளையார்கோவில் தெருவை இணைக்கும் 20 சதவீதம் பணி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் பிள்ளையார் கோவில் தெருவின் வலதுபுறத்தில் மின்கம்பம் இருப்பதால் அங்கு பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது.

கோரிக்கை

இதுகுறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்டபோது மின்வாரியம் சார்பில் மின்கம்பத்தை மாற்றி அமைத்தால் பணியை தொடர தயாராக உள்ளோம் என்று தெரிவித்தனர். மின்வாரிய தரப்பில் கேட்டபோது மின்கம்பத்தை ஒட்டி பள்ளம் தோண்டிவிட்டனர் எனவும் தற்போது அந்த மின்கம்பம் 4 புறமும் இணைப்பு செல்லும் மின்சார கம்பிகளின் துணையோடு சாயாமல் இருக்கிறது என்று தெரிவித்தனர்.

இந்த மின் கம்பத்தினால் எந்த நேரத்திலும் ஆபத்து வராலாம் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் புதிதாக கட்டப்பட்ட கால்வாய்கள் இணைக்கப்படாதால் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டே அந்த பகுதியை கடக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆபத்தான மின் கம்பத்தை மாற்றி அமைத்து கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story