தூத்துக்குடியில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: 2 பேர் சிக்கினர்
தூத்துக்குடியில் பெண்ணிடம் 3½ பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பெண்ணிடம் 3½ பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். நகை மீட்கப்பட்டதுடன், அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தங்கசங்கிலி பறிப்பு
தூத்துக்குடி ராஜீவ்நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் ரோஸ்லின் மேரி (வயது 32). இவர் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
இவர் பால்பாண்டி நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் ரோஸ்லின் மேரி கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
கைது
இது குறித்து ரோஸ்லின் மேரி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், தனிப்பிரிவு கலைவாணர் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதன்பேரில் சத்யாநகரை சேர்ந்த வேல்மணி (வயது 37), சதாசிவன் மகன் பாரதிகுமார் (23) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து தங்கநகையையும் போலீசார் மீட்டனர். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story