வலங்கைமான் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
வலங்கைமான் வட்டார கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர்:
வலங்கைமான் வட்டார கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் ஜூலியஸ், மாவட்ட பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் ஈவேரா கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜெயசீலன், அமிர்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தை குறைத்து, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் பணியிடங்களை உருவாக்கி, புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். நடுநிலைப்பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள தனியார் பள்ளிகளில் இருந்து மாற்று பணியில் சென்றுள்ள ஆசிரியர்களை மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
8-ந்தேதி ஆர்ப்பாட்டம்
நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மழலையர் பயிற்சி முடித்த ஆசிரியர்களை அந்த பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டும். பள்ளியில் கற்பித்தல் பணிகளுக்கு இடையூறாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற பயிற்சிகளை கைவிட வேண்டும். நன்னிலம் வட்டாரத்தில் விடுபட்டுள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து நேரடியாக ஆயுள் காப்பீடு பிரீமியம் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி வலங்கைமான் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. மகளிர் தின விழாவை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி திருவாரூரில் கருத்தரங்கு நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story