வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யக்கூடாது
நேரடி கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
செஞ்சி,
செஞ்சி அருகே மேல்எடையாளம் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் காரிப்பருவம் 2021 - 2022-ம் ஆண்டில் தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் மாவட்ட கலெக்டர்களிடம் உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் அந்தந்த மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மேல் எடையாளம், சத்தியமங்கலம், திருவம்பட்டு, பொன்பத்தி, எய்யில், செவலபுரை, மேல் வைலாமூர், கெங்கபுரம் உள்பட 38 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆதாரவிலை
மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஏ கிரேடு நெல்லிற்கு குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2060-ம், பொது ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2015-ம் வழங்கப்படுகிறது.
இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 120 விவசாயிகளிடமிருந்து சன்னரக நெல் 186 மெட்ரிக் டன்னும், பொது ரகம் 444 மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், வியாபாரிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது.
இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் சிவா, செஞ்சி தாசில்தார் பழனி ,வருவாய் ஆய்வாளர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story