வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி மறுத்ததால் ஆத்திரம் மலைக்கிராம மக்கள் சாலைமறியல் வனக்காவலர் மீது தாக்குதல்


வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி மறுத்ததால் ஆத்திரம் மலைக்கிராம மக்கள் சாலைமறியல் வனக்காவலர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 27 Feb 2022 10:18 PM IST (Updated: 27 Feb 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே வனப்பகுதிக்கு வேலைக்கு செல்ல அனுமதி மறுத்ததால் மலைக்கிராம மக்கள் சாலைமறியல் செய்தனர். மேலும் வனக்காவலர் தாக்கப்பட்டார்.

கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. அதன்பின்னர் வனத்துறையினர் வனப்பகுதியில் வசித்து வரும் மலைக்கிராம மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். 
இதன் ஒருபகுதியாக மலைக்கிராம மக்கள் விவசாயத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. மேலும் வருசநாடு அருகே அமைந்துள்ள மஞ்சனூத்து சோதனைச்சாவடியில் மலைக்கிராம மக்களை தவிர உரிய அனுமதி இல்லாமல் வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. 
தற்போது மலைக்கிராம பகுதியில் இலவம் பஞ்சு சீசன் தொடங்கியுள்ளது. இதையடுத்து நேற்று காலை கோரையூத்து, அரண்மனைப்புதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் வேலைக்காக வெள்ளிமலைக்கு அரசு பஸ்சில் சென்றனர். 
சாலைமறியல்
அப்போது மஞ்சனூத்து சோதனைச்சாவடியில் வனக்காவலர் செல்லத்துரை (வயது48) பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அவர் முறையான அனுமதி பெறாத தொழிலாளர்களை கூலி வேலைக்காக வனப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். 
இதையடுத்து பஸ்சில் வந்த தொழிலாளர்களுக்கும், வனக்காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து அனுமதி மறுத்ததால் பஸ்சில் வந்த தொழிலாளர்கள் அனைவரும் அதில் இருந்து இறங்கி சோதனைச்சாவடி முன்பு வெள்ளிமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தாக்குதல்
அப்போது அங்கு வந்த சிலர், வனக்காவலர் செல்லத்துரையை தாக்கி அவரது செல்போனை பிடுங்கி உடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து மலைக்கிராம மக்களிடையே தகவல் பரவியது. இதையடுத்து அரசரடி, இந்திராநகர் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதுகுறித்து தகவலறிந்த மயிலாடும்பாறை, வருசநாடு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
கலைந்து சென்றனர்
இந்தநிலையில் ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன், கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், மேகமலை வனச்சரகர் சதீஷ்கண்ணன், வருசநாடு வனச்சரகர் ஆறுமுகம் ஆகியோர் மஞ்சனூத்து சோதனைச்சாவடிக்கு வந்தனர். அவர்கள் சாலைமறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
பின்னர் பிரச்சினை தொடர்பாக மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் வனத்துறையினருடன் ஊர் முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதை ெபாதுமக்கள் ஏற்றுக்கொண்டு சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 
பேச்சுவார்த்தை
பின்னர் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் வழக்கம் போல கூலி வேலைக்கு சென்று வர வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் இருந்து விளை பொருட்களை ஏற்றி வர வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தையை வருகிற 5-ந்தேதிக்கு போலீசார் தள்ளி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
 இதனிடையே சோதனைச்சாவடியில் தாக்கப்பட்ட வனக்காவலர் செல்லத்துரை தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோல செல்லத்துரை தாக்கியதாக கோரையூத்து கிராமத்தை சேர்ந்த பஞ்சம்மாள் (55), ராணி (47), ஒச்சம்மாள் (58) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த பிரச்சினை தொடர்பாக இருதரப்பிலும் மயிலாடும்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story