ஓசூரில் பரபரப்பு ஓட்டல் காவலாளி குத்திக்கொலை கொள்ளை கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


ஓசூரில் பரபரப்பு ஓட்டல் காவலாளி குத்திக்கொலை கொள்ளை கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Feb 2022 10:33 PM IST (Updated: 27 Feb 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் ஓட்டலில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் காவலாளியை குத்திக்கொலை செய்து விட்டு கல்லாப் பெட்டியில் இருந்த ரூ17 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓசூர்:
ஓசூரில் ஓட்டலில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள், காவலாளியை குத்திக்கொலை செய்து விட்டு கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.17 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காவலாளி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 60). இவர், ஓசூர் ஆவலப்பள்ளி பகுதியில் மகள் செல்வி வீட்டில் வசித்து வந்தார். ஓசூர் கமர்சியல் சாலை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இவர் காவலாளியாக இருந்து வந்தார். காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை காவலாளியாக வேலை பார்த்து வந்த அவர், இரவில் ஓட்டலில் தங்கி விடுவார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல், ஓட்டலுக்கு பணிக்கு வந்த தாமோதரன் இரவு 11 மணிக்கு பணி முடிந்த பின்னர் ஓட்டலுக்குள் படுத்து தூங்கினார். நள்ளிரவில் மர்ம நபர்கள், ஓட்டலின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்று அங்கிருந்த கல்லாப்பெட்டியில் பணத்தை திருட முயன்றுள்ளனர்.
குத்திக்கொலை
சத்தம் கேட்டு விழித்து கொண்ட தாமோதரன் திருடன், திருடன் என கூச்சல் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே  ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அந்த நபர்கள் ஓட்டல் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.17 ஆயிரத்தை திருடி கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். நேற்று காலை ஊழியர்கள்  ஓட்டலை திறக்க வந்தனர். அப்போது காவலாளி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 
கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று காவலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை ஆய்வு செய்தனர். சம்பவ இடத்திற்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலாளியை கொன்று பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story