மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வாலிபர் பலி


மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வாலிபர் பலி
x
தினத்தந்தி 27 Feb 2022 11:32 PM IST (Updated: 27 Feb 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே பாகனேரியில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் வாலிபர் பலியானார்.

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் ஏராளமான வாலிபர்கள் ஆர்வத்துடன் காளைகளை மடக்கி பிடித்தனர். மஞ்சுவிரட்டை காண சிவகங்கை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு கூடி இருந்தனர். துள்ளி குதித்து வந்த சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்கின. சில காளைகள் பிடிபடாமல் தப்பி ஓடின.
இந்த நிலையில் மஞ்சுவிரட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரரான திருப்புவனத்தை அடுத்த குயவன்குளத்தை சேர்ந்த சக்திவேல்(வயது 28) என்பவரை காளை ஒன்று முட்டி தூக்கி வீசியெறிந்தது. இதில் கீழே விழுந்த சக்திவேல் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து மதகுபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story