உக்ரைனில் மகன் சிக்கித்தவிக்கும் அதிர்ச்சியில், தாய் சாவு


உக்ரைனில் மகன் சிக்கித்தவிக்கும் அதிர்ச்சியில், தாய் சாவு
x
தினத்தந்தி 27 Feb 2022 11:38 PM IST (Updated: 27 Feb 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனிலிருந்து நாடு திரும்ப முடியாமல் பேரணாம்பட்டு மாணவர் தவிக்கும் நிலையில் மனவேதனைக்கு ஆளான தாய் அதிர்ச்சியில் இறந்தார்.

பேரணாம்பட்டு

உக்ரைனிலிருந்து நாடு திரும்ப முடியாமல் பேரணாம்பட்டு மாணவர் தவிக்கும் நிலையில் மனவேதனைக்கு ஆளான தாய் அதிர்ச்சியில் இறந்தார். அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய உரிய நேரத்தில் வர முடியாத மகன் வீடியோவில் தாயின் உடலை பார்த்து கதறியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவன் சிக்கி தவிப்பு

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் படித்து வரும் மாணவர்கள் உள்பட 18 ஆயிரம் இந்தியர்கள் உணவு கூட கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து, முதல் கட்டமாக பலரை மீட்டு விமானம் மூலம் அழைத்து வந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகாவில் உள்ள கொத்தூர் ஊராட்சி புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்  சங்கரன். விவசாயி. இவரது மனைவி சசிகலா (வயது 53). இவர்களது இரண்டாவது மகன் சக்திவேல் உக்ரைன் நாட்டில் முஜைல் நகரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
தற்போது போர் தீவிரம் அடைந்துள்ளதால் ரஷிய குண்டு வீச்சில் பல இடங்கள் தீப்பற்றி எரிகின்றன. சக்திவேல் அங்கு சிக்கி தவிப்பதால் பேரணாம்பட்டில் உள்ள இவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தாய் சாவு

சக்திவேலின் தாயார் சசிகலா (வயது 53) ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தனது மகன் உக்ரைன் நாட்டில் போர் நடக்கும் பகுதியில் சிக்கியிருப்பதால் சசிகலா மிகவும் மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார். 

ஏராளமானோர் உங்கள் மகன் எப்போது நாடு திரும்புவார் என அடிக்கடி கேட்டு வந்ததால் மன அழுத்தத்துக்கு அவர் ஆளானர். எனினும் பலர் உக்ரைனில் இருந்து மத்திய அரசு இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வருகிறது. உங்கள் மகனும் அழைத்து வரப்பட்டு விடுவார் என  நம்பிக்கையை ஏற்படுத்தி வந்தனர்.

 இந்த நிலையில் நேற்று முன்தினம் சசிகலாவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படவே அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சசிகலா இறந்த தகவல் அவரது மகன் சக்திவேலுக்கு வீடியோ கால் மூலம் தெரிவிக்கப்பட்டது. 

கதறல்

இறந்த தாய்க்கு இறுதி சடங்கு செய்ய நாடு திரும்ப முடியாமல் தவித்து, தாயின் உடலை வீடியோ காலில் பார்த்து சக்திவேல் கதறினார். இந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே தாயை இழந்து தவிக்கும் சக்திவேலுவுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக அவரை உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீருடன் கூறி வருகின்றனர். 

Next Story