திஷா சாலியன் மரணம் குறித்து அவதூறு மத்திய மந்திரி நாராயண் ரானே, நிதேஷ் ரானே மீது வழக்குப்பதிவு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 27 Feb 2022 11:52 PM IST (Updated: 27 Feb 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

திஷா சாலியன் மரணம் குறித்து அவதூறான தகவல்களை பரப்பியதாக மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மும்பை, 
திஷா சாலியன் மரணம் குறித்து அவதூறான தகவல்களை பரப்பியதாக மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
நாராயண் ரானே பேச்சு
நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன். இவர் 2020-ம் ஆண்டு ஜூன் 8-ந் தேதி மால்வாணி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் உயிரிழந்த 6 நாட்களில் சுஷாந்த் சிங்கும் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்தநிலையில் சமீபத்தில் மத்திய மந்திரி நாராயண் ரானே திஷா சாலியன் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறினார். இதற்கு திஷா சாலியனின் பெற்றோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தங்களது மகளின் மரணத்தை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என கட்சி தலைவர்களை கேட்டு கொண்டனர். 
இந்தநிலையில் திஷா சாலியன் மரணம் குறித்து மாநில பெண்கள் ஆணையம் மால்வாணி போலீசாரிடம் அறிக்கை கேட்டு இருந்தது. அதில் திஷா சாலியன் கற்பழிக்கப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவதாக போலீசார் கூறியிருந்தனர்.
வழக்குப்பதிவு
இதையடுத்து திஷா சாலியன் மரணம் குறித்து அவதூறு, தவறான தகவல்களை பரப்பிய மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானே எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக நாராயண் ரானே, நிதேஷ் ரானே மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு மாநில பெண்கள் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் திஷா சாலியன் மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக நாராயண் ரானே, நிதேஷ் ரானே மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 
இதேபோல திஷா சாலியன் மரணம் தொடர்பாக அவதூறுகளையும், தவறான தகவல்களை பரப்பி வரும் சமூகவலை தள கணக்குகளை முடக்கவும் போலீசாருக்கு பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Next Story