ரெயில் மோதி தொழிலாளி சாவு
குழித்துறை அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியானார். அவரது உடல் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டு துண்டு, துண்டாக சிதறி கிடந்த பாகங்கள் மீட்கப்பட்டன.
நாகர்கோவில்:
குழித்துறை அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியானார். அவரது உடல் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டு துண்டு, துண்டாக சிதறி கிடந்த பாகங்கள் மீட்கப்பட்டன.
கட்டிட தொழிலாளி
குமரி மாவட்டம் அருவிக்கரை அருகில் உள்ள மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜர்சிங் (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர் கேரள மாநிலம் திருவல்லாவில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இவருக்கு பிந்து என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சுஜர்சிங் ஒவ்வொரு வார இறுதியிலும் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வருவது வழக்கம்.
இதேபோல் நேற்று முன்தினம் அவர், நண்பர்கள் 4 பேருடன் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் வந்தார். இரவு 9.30 மணிக்கு குழித்துறை ரெயில் நிலையத்தில் இறங்கினர். பின்னர் சுஜர்சிங்கின் நண்பர்கள் அங்கிருந்து புறப்பட்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால் சுஜர்சிங் மட்டும் வீட்டிற்கு செல்லும் வழியில் செல்லாமல் குழித்துறை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
ரெயில் மோதி சாவு
அப்போது அந்த வழியாக புனலூரில் இருந்து மதுரை நோக்கி வந்த ரெயில் சுஜர்சிங் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அப்போது ரெயில் மோதிய இடத்தில் சுஜர்சிங்கின் ஒரு கால் மற்றும் ஒரு கை மட்டுமே கிடைத்தது. மற்ற உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. புனலூர்- மதுரை ரெயிலின் என்ஜின் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் மாற்றப்படுவது வழக்கம். அதனால் அந்த ரெயில் என்ஜினில் சுஜர்சிங்கின் உடல் சிக்கியிருக்கிறதா? என பார்க்குமாறு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி என்ஜினில் சென்று பார்த்த போது இடுப்புக்கு கீழ் உள்ள கால் பகுதி ஒன்று சிக்கியிருந்தது.
துண்டு, துண்டான உடல்
இதற்கிடையே நெல்லை துணை சூப்பிரண்டு சுதிர்லாலும், இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா மற்றும் போலீசாரும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பள்ளியாடி நோக்கி சுமார் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று சுஜர்சிங்கின் உடலின் மற்ற பாகங்கள் எங்காவது சிதறி கிடக்கிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் பள்ளியாடி ரெயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை அருகில் தலை மற்றும் இடுப்புக்கு மேல் உள்ள பகுதி கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் துண்டு, துண்டாக கிடந்த உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுஜர்சிங் விபத்து நடந்த பகுதி வழியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும், மது அருந்தி விட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதியிருக்கலாம் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். அதே சமயத்தில் மதுபாட்டில் வைத்திருந்த சுஜர்சிங்கின் பேக்கையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story