காவலர்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டினர்: விபத்தில் இறந்த ஏட்டுவின் குடும்பத்தினருக்கு ரூ.13 லட்சம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் வழங்கினார்
விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்தினருக்கு காவலர்கள் ஒன்றிணைந்து திரட்டிய ரூ.13 லட்சம் நிதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் வழங்கினார்.
புதுக்கோட்டை:
நிதி உதவி
புதுக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன். போலீஸ் ஏட்டான இவர் புதுக்கோட்டையில் பணியாற்றி வந்த நிலையில் கோவையில் போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு வாகன விபத்தில் கண்ணன் கடந்த ஆண்டு (2021) மே மாதம் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் இறந்த ஏட்டு கண்ணனின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க தமிழ்நாடு போலீஸ் துறையில் 1997-ம் ஆண்டு 2-வது பிரிவில் பணியில் சேர்ந்த போலீசார் ஏற்பாடு செய்தனர்.
இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிதி உதவி வழங்கினர். மொத்தம் ரூ.13 லட்சத்து 37 ஆயிரத்து 500 நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியை இறந்த கண்ணனின் குடும்பத்தினருக்கு வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இறந்த கண்ணனின் தாய் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் நிதி உதவிக்கான காசோலையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் வழங்கினார்.
நெகிழ்ச்சி
இறந்த போலீஸ்காரரின் குடும்பத்தினருக்கு காவலர்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி வழங்கியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செரீனா பேகம் பேசுகையில், ‘‘போலீசார் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றக்கூடியவர்கள். அதேநேரத்தில் தங்களது குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். உடல் நலத்தை பேண வேண்டும். இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஒரு இழப்பு என்பது அதனை யாராலும் ஈடுகட்ட முடியாது’’ என்றார். நிகழ்ச்சியில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story