கோவிலூர், திருவரங்குளத்தில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் பால்குட ஊர்வலம் கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்


கோவிலூர், திருவரங்குளத்தில்  அம்மன் கோவில்களில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்  கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
தினத்தந்தி 28 Feb 2022 12:13 AM IST (Updated: 28 Feb 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

கோவிலூர், திருவரங்குளத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆலங்குடி:
முத்துமாரியம்மன் கோவில் 
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே  கோவிலூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது. கடந்த 20-ந் தேதி மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், 21-ந் தேதி செங்கவளநாட்டை சேர்ந்த கிராமத்தார்களால் தினந்தோறும் மண்டகப்படியும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. 9-ம் நாளான நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. காலையில் கோவில் வாசலில் பொங்கல் வைக்கப்பட்டது. 
நேர்த்திக்கடன் செலுத்தினர்
பின்னர் செங்கவளநாட்டை சேர்ந்த கிராமங்களில் வீடுதோறும் கோழி அறுத்தும் ஆடு வெட்டியும் பொங்கல் வைக்கப்பட்டது. கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் பக்தர்கள் மொட்டை போட்டும், பால் குடம் எடுத்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவரங்குளம்
திருவரங்குளம் அருகே உள்ள பூந்தோட்டம் காளியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா மற்றும் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக காளியம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான  வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவரங்குளம் சிவன் கோவில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story