நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்- விவசாயிகள்
உடையநாடு மற்றும் ஊமத்தநாடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதுபாவாசத்திரம்:-
உடையநாடு மற்றும் ஊமத்தநாடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முறை வைத்து தண்ணீர் திறப்பு
நடப்பு சாகுபடி பருவத்தில் மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருந்தும் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் போன்ற கடைமடை பகுதிகளுக்கு முறை வைத்து தான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நடவு பணிகளை தொடங்குவதற்கு விவசாயிகள் சிரமப்பட்டனர். ஆற்றுப்பாசனம் கைகொடுக்காத சூழலில் விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நடவு பணிகளை மேற்கொண்டனர். பல இடங்களில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி நடந்தது. இந்்த பகுதியில் காலம்தாழ்த்தி செய்திருந்த சம்பா பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு வரை பூக்கொல்லை, முடச்சிக்காடு, உடையநாடு மற்றும் ஊமத்தநாடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. ஆனால் இந்த ஆண்டு பூக்கொல்லை மற்றும் முடச்சிக்காடு பகுதியில் மட்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு 20 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஊர்களில் இருந்து நெல் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
திறக்க வேண்டும்
இந்த கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றிற்கு 500 முதல் 600 மூடைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். கொள்முதல் பணிகள் மந்தமாக இருப்பதால் கொள்முதல் நிலைய வாசலில் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
ஒரு வார காலம் காத்திருந்தால் தான் தற்சமயம் நெல்லை விற்க முடியும் என விவசாயகிள் கூறுகிறார்கள். வழக்கமாக உடையநாடு மற்றும் ஊமத்தநாடு பகுதிகளில் செயல்படும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story