வீடுகளில் பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை
சிவகாசி உட்கோட்டத்தில் வீடுகளில் பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் கூறினார்.
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்தில் வீடுகளில் பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
சிவகாசி உட்கோட்ட பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் விபத்து இல்லாத பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறை சார்பில் டான்பாமா திருமண மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பட்டாசு தயாரிப்பு ஆபத்தான தொழில் தான். ஆனால் அதை விதிமீறல்கள் இல்லாமல் செய்தால் விபத்துக்களை முற்றிலும் தடுக்க முடியும். அரசு வகுத்து கொடுத்த விதிகளை மீறும்போது தான் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் உண்டாகிறது. சில பட்டாசு ஆலைகளில் அறைகள் உள்வாடகைக்கு விடப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் பல முறை விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆனால் இனி வரும் காலத்தில் ஆலைகளில் அறைகளை உள்வாடகைக்கு விடுவதை சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகம் கைவிட வேண்டும். அவ்வாறு உள் வாடகைக்கு விடப்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மருந்து கலவை
மேலும் பட்டாசு ஆலைகளில் மருந்து கலவை செய்யப்பட்டு பின்னர் அந்த மருந்து கலவைகள் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விதியை மீறி வீடுகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது. இதனால் கூட பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் நிகழ்ந்துள்ளது.
இதை தவிர்க்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் இருந்து மருந்து கலவைகள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களுக்கு பட்டாசு மூலப் பொருட்கள் வினியோகம் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி ஆலை ஆய்வு தனி தாசில்தார் ஸ்ரீதர், வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி அமித்கோயல், பட்டாசு பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கணேசன், கண்ணன், ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர்கள் சுபக்குமார், மலையரசி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் 200 பேர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story