கட்டிட கழிவுகளை கொட்டி தரமற்ற முறையில் கால்பந்து மைதானம் அமைக்கப்படுவதாக புகார் பணிகளை உடனடியாக நிறுத்த முன்னாள் வீரர்கள் கோரிக்கை
தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் கால்பந்து மைதானம் கட்டிட கழிவுகளை கொட்டி தரற்ற முறையில் அமைக்கப்படுவதாக முன்னாள் வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த பணிகளை உடனடியாக நிறுத்துமாறும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர்:-
தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் கால்பந்து மைதானம் கட்டிட கழிவுகளை கொட்டி தரற்ற முறையில் அமைக்கப்படுவதாக முன்னாள் வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த பணிகளை உடனடியாக நிறுத்துமாறும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அன்னை சத்யா விளையாட்டு அரங்கம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு நவீன உள் விளையாட்டு அரங்கம், டென்னிஸ் மைதானம், இறகுப்பந்து, வாலிபால், ஹாக்கி, கால்பந்து, கபடி, மைதானம் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்டவையும் உள்ளன.
இந்த மைதானத்தில் சர்வதேச அளவிலான செயற்கை தடகள ஓடுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தடதள ஓடுதளத்தின் அருகே, சர்வதேச அளவிலான கால்பந்தாட்ட மைதானமும் அமைக்க மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் ரூ.7.85 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது.
கட்டிட கழிவுகள்
இந்த நிலையில் மைதானத்தில் அடித்தளம் அமைக்க செம்மண், கிராவல், மணல் ஆகியவற்றை கொட்டி சமதளம் அமைப்பதற்கு பதிலாக, தஞ்சை மேலவீதி, பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதில் இடிக்கப்படும் கட்டிடங்களின் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து குவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மைதானம் தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக கூறி, மைதானத்தின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வு பெற்ற மண்டல மூத்த மேலாளர் மோகன் கூறுகையில், ‘தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் சர்வதேச அளவிலான தடகள ஓடுதளமும், கால்பந்தாட்ட மைதானமும் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்த பணியை மேற்பார்வையிட, ஆலோசனைகளை வழங்க அனுபவம் பெற்ற நிபுணர் குழுக்கள் ஏதும் அமைக்கப்படவில்லை.
பணிகளை நிறுத்த வேண்டும்
இதனால் கால்பந்தாட்ட மைதானம் அமைக்க அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொள்ளாமல், மைதானத்தில் இடிக்கப்படும் கட்டிடங்களின் கழிவுகளை கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். இதில் கண்ணாடி பாட்டில்கள், டைல்ஸ் ஓடுகள், பீங்கான் போன்றவை அதிகளவு காணப்படுகிறது.
இதை சமன்படுத்தி அதில் மைதானம் அமைத்தால் தரமில்லாமல் போகும். மழைக்காலங்களில் மேலே கொட்டப்படும் மண் கரைந்தால், அடியில் உள்ள கண்ணாடிகள் போன்ற கூர்மையான பொருட்கள், வீரர்களில் கால்களில் குத்தி காயம் ஏற்படும். எனவே இந்த பணியை உடனடியாக நிறுத்தி, நிபுணர் குழுவை அமைத்து பணிகளை தரமாக அமைக்க வேண்டும்’ என்றார்.
அரசுக்கு தகவல்
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சர்வதேச ஓடுதளம், கால்பந்தாட்ட மைதானம் அமைக்க ஒப்பந்த பணிகளை எடுத்தவர்கள், கட்டிடங்களின் கழிவுகளை கொண்டு வந்து தரையை சமன்படுத்துவதற்காக கொட்டியுள்ளனர். இதுதொடர்பாக புகார்கள் விளையாட்டு வீரர்களிடமிருந்து வந்துள்ளது. நாங்கள் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்’ என்றனர்.
Related Tags :
Next Story