தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Feb 2022 1:34 AM IST (Updated: 28 Feb 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மாநில எல்லையில் சோதனைச்சாவடி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லையில் உள்ளது. இங்கு எப்போதும் வாகன போக்குவரத்தால் பரபரப்பாக காணப்படுகிறது. மாநில எல்லையான இந்த பகுதியில் திருட்டு, கொள்ளை, கடத்தல் சம்பவங்களை தடுக்க சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சஞ்சய்குமார், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி
வேகத்தடை வேண்டும்
தர்மபுரி- சேலம் செல்லும் பிடமனேரி சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் சாலையை ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு கடக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாலையின் குறுக்காக கடப்பவர்கள் பிரதான சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே இந்த பகுதியில் பிரதான சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் இங்குள்ள சிக்னலை போக்குவரத்து விதிகளின்படி செயல்படுத்த போக்குவரத்து போலீசார் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், தர்மபுரி
வேகத்தடைகளில் ஒளிரும் விளக்குகள்
கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் 8-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. நகருக்குள் பள்ளிகள், தேவாலயம், முக்கிய சந்திப்பு சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் இந்த வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் இரவு நேரத்தில் இருப்பது  தெரிவதில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் விபத்துகளில் சிக்குகிறார்கள். எனவே வேகத்தடைகளில் ஒளிரும் விளக்குகள் பொருத்திட வேண்டும்.
-ஆனந்தன், கிருஷ்ணகிரி
சாலையோர மரங்களில் விளம்பர பதாகைகள் 
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து தலைவாசல் வரை செல்லும் சாலையோரத்தில் வரிசையாக இருக்கும் மரங்களில் விளம்பர பலகையை வைத்து ஆணி அடிக்கப்பட்டுள்ளது. இதனால் மரங்களின் ஆயுட்காலம் விரைவில் முடிந்துவிடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரங்களில் விளம்பர பலகையை பொருத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளவரசன், சேலம்.
கொண்டை ஊசி வளைவுகளில் சுற்றுச்சுவர்
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே கடகநத்தம் மலைகிராமத்திற்கு செல்லும் கொண்டை ஊசி வளைவுகள் பாதுகாப்பு சுவர் இல்லாமல் உள்ளது. சுமார் ஆயிரம் அடி உயரமுள்ள இந்த சாலையில் பெரும் விபத்து நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
-ஊர்மக்கள், கடகநத்தம், கிருஷ்ணகிரி.
குண்டும், குழியுமான சாலை
சேலம் அம்மாபேட்டையில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். அந்த பகுதியில் வேகத்தடைகள் இல்லாததால் சில நேரங்களில் வாகனங்கள் வேகமாக சென்று விபத்தில் சிக்குகின்றன. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை புதுப்பித்து, வேகத்தடை அமைத்து தர முன் வர வேண்டும்.
-ஊர்மக்கள், அம்மாபேட்டை, சேலம்.
தெருநாய்கள் தொல்லை
நாமக்கல் நகரில் 39 வார்டுகளிலும் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக சேந்தமங்கலம் சாலையில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள் அந்த வழியாக ரெயில் நிலையங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிக்கின்றன. இதனால் தெருநாய்களுக்கு பயந்து சிலர் விபத்தில் சிக்கும் சூழ்நிலையும் இருந்து வருகிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், நாமக்கல்.

Next Story