மகனை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் பெண் கண்ணீர்


மகனை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் பெண் கண்ணீர்
x
தினத்தந்தி 28 Feb 2022 2:10 AM IST (Updated: 28 Feb 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

மகனை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் பெண் கண்ணீர் விட்டு கதறினார்

திருச்சி
திருச்சி மாவட்டம், மணப்பாறை புத்தாநத்தம் ரோடு பகுதியை சேர்ந்த ராமசாமி-ஜெயலட்சுமி தம்பதி நேற்று காலை திருச்சிக்கு வந்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற அவர்கள், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், கலெக்டர் சிவராசு பெரியமிளகுபாறையில் உள்ள அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிந்து அங்கு வந்தனர்.
அப்போது, நிகழ்ச்சி முடித்து வெளியே வந்த கலெக்டரின் காலில், திடீரென ஜெயலட்சுமி விழுந்து, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தங்களது மகன் ராஜேசை மீட்டுத்தரும்படி கதறி அழுதார். மேலும், இதுகுறித்த கோரிக்கை மனுவையும் அவர்கள் அளித்தனர். 
இறுதியாண்டு மருத்துவம் 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது
எனது மகன் ராஜேஷ், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வருகிறான். தற்போது அங்கு நடக்கும் போர் காரணமாக அவன் தங்கி உள்ள வீட்டை விட்டு வெளியில் வராமல் ஆபத்தான நிலையில் உள்ளான்.
உணவு, தங்கும் இடம் இன்றி தவித்து வருகிறான். எனவே, எங்கள் மகனை மீட்டு தமிழகம் அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உங்கள் மகன் பத்திரமாக வீடு திரும்புவான். அவனை பயப்படாமல் இருக்கும்படி அறிவுரை கூறுங்கள் என்றும் அவர்களுக்கு, கலெக்டர் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.


Next Story