திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 10 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
27 கொண்டை ஊசி வளைவுகள்
சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த மலைப்பாதையானது குறுகலான 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது ஆகும். தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய ரோடாக திம்பம் மலைப்பாதை உள்ளதால், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு திம்பம் மலைப்பாதையில் தடை விதிக்கப்பட்டது. இதனால் தினமும் காலை 6 மணியில் இருந்து வாகனங்கள் அனைத்தும் திம்பம் மலைப்பாதையில் சென்று வருகின்றன. ஒரே நேரத்தில் வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிகழ்வு தினமும் நடைபெற்று வருவதால் பஸ் பயணிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பழுதாகி நின்ற லாரி
இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு நிலக்கரி பாரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியானது திம்பம் மலைப்பாதையின் 27-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று காலை 7 மணி அளவில் திரும்பியபோது திடீரென பழுதாகி நின்றது. எவ்வளவோ முயன்றும் டிரைவரால் லாரியை இயக்க முடியவில்லை.
இதனால் திம்பம் மலைப்பாதையின் இருபுறங்களிலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் காரப்பள்ளம் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணி நடந்தது. 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாலை 5 மணி அளவில் லாரியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. திம்பம் மலைப்பாதையில் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story