போலியோவுக்கு எதிரான நமது போர் வெற்றி - பசவராஜ் பொம்மை பெருமிதம்
போலியோவுக்கு எதிரான நமது போர் வெற்றி அடைந்துள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
போலியோவுக்கு எதிராக போர்
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணி தொடக்க நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் இருந்து போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆயினும் ஆண்டில் 3 நாட்கள் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு போலியோவால் ஏற்பட்ட எதிர்மறையான பாதிப்புகளை நாம் பார்த்தோம். சமூகத்தில் பெரும் பகுதி மக்களுக்கு உடல் ஊனத்தை ஏற்படுத்தியது. அது மிக மோசமான நோய் என்பது நிரூபிக்கப்பட்டது. போலியோவுக்கு எதிராக போர் தொடங்கப்பட்டது. இந்த போலியோ சொட்டு மருந்து வழங்க தொடங்கிய பிறகு அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காசநோய், காலரா, மலேரியா மற்றும் பிளகே் ஆகிய நோய்களை வெற்றிகரமாக கையாண்டோம். அதே போல் போலியோவுக்கு எதிரான நமது போர் வெற்றி கண்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
பிரதமர் மோடியும் இந்த போலியோ முகாமை தொடங்கி வைத்துள்ளார். அவரின் அறிவியல் பார்வை மற்றும் தூய்மை பாரதம் திட்டம் ஆகியவற்றால் இன்று பல்வேறு தொற்று நோய்கள் தடுக்கப்பட்டுள்ளன. யோகா சர்வதேச அளவில் எடுத்து செல்லப்பட்டுள்ளது. ஒவ்வொருவரையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள யோகா உதவுகிறது. கொரோனா தடுப்பூசிக்கு பிரதமர் அதிக அழுத்தம் கொடுத்தார்.
அதனால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைக்கப்பட்டன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுது. இந்த தடுப்பூசிக்கான நற்பெயர் அறிவியல் விஞ்ஞானிகள், 130 கோடி மக்கள் மற்றும் பிரதமர் மோடிக்கு கிடைக்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
முற்போக்கு சிந்தனை
இதையடுத்து விடுதலை போராட்ட வீராங்கணை ராணி சென்னம்மா ராணியாக முடிசூடப்பட்டு நேற்று 350-வது ஆண்டையொட்டி பெங்களூருவில் அவரது உருவப்படத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராணி சென்னம்மா ராணியாக பதவி ஏற்று 350 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவரது சொந்த ஊரான கெலடி கிராமத்தில் பெரிய அளவில் அரசு சார்பில் விழா நடத்தப்படும். அவர் ஒரு வீரதீர பெண். இதுபோன்ற வீரதீர பெண்ணை அடையாளம் கண்டதால் தான் கர்நாடகம் இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அவர் முற்போக்கு சிந்தனை கொண்டவராக இருந்துள்ளார்.
ஆன்மிக வரலாறு
கர்நாடகத்திற்கு தனி கலாசாரம், மொழி, வாழ்வியல் முறை, பொருளாதாரம், சமூக-ஆன்மிக வரலாறு உள்ளது. இவற்றை உள்ளடக்கியது தான் கர்நாடகம். இதில் ராணி சென்னம்மாவின் பங்கு முக்கியமானது. அவரது காலக்கட்டத்தில் தனது திறமைகளை வெளிப்படுத்தினார். அவர் குறித்து நமது குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டியது அவசியம்.
பாடப்புத்தகங்களில் அவர் குறித்த பாடங்கள் இடம் பெற வேண்டும். அவர் பிறந்த ஊரான கெலடி கிராமத்தை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story