கர்நாடகத்தில் 1,054 போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்


கர்நாடகத்தில் 1,054 போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
x
தினத்தந்தி 28 Feb 2022 3:06 AM IST (Updated: 28 Feb 2022 3:06 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் கர்நாடகத்தில் உள்ள 1,054 போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. தவறுகள் நடைபெறுவதை தடுக்க இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

  
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

  நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள், அமலாக்கத்துறை அலுவலகங்கள், சி.பி.ஐ. உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக விசாரணை நடக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது கட்டாயம் என்று கடந்த 2020-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.

  போலீஸ் நிலையங்களில் எந்த மாதிரி விசாரணை நடக்கிறது, அங்கு போலீசார் குற்றவாளிகளுக்கு எதிராக எப்படி நடந்து கொள்கிறார்கள், அங்கு வேறு ஏதானும் தவறுகள் நடக்கிறதா? என்பதை கண்காணித்து, அதன்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்திருந்தது.

1,054 போலீஸ் நிலையங்களில்...

  இதையடுத்து, மத்திய உள்துறையும் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், சி.பி.ஐ., அமலாக்கத்துறை அலுவலகங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. சுப்ரீம் கேர்ட்டு, மத்திய உள்துறையின் உத்தரவின் பேரில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது.

  இந்த நிலையில், மாநிலத்தில் உள்ள 1,054 போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், சைபர் பிரிவு போலீஸ் நிலையங்கள், மகளிர் போலீஸ் நிலையங்கள் என 1,054 போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு...

  போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பார்த்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளை, நகர்ப்புறமாக இருந்தால், உதவி போலீஸ் கமிஷனர்களுக்கும், பிற மாவட்டங்களாக இருந்தால் துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

  போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்கு சேமித்து வைக்கும் அளவுக்கு தொழில் நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
லஞ்சம் கேட்பது தவிர்க்கப்படும்

  போலீஸ் நிலையங்களில் நடைபெறும் தவறுகள் மூடி மறைக்கப்படுவதாகவும், போலீஸ் நிலையத்திற்கு நீதி கேட்டு செல்லும் மக்களிடம் போலீசார் சரியான முறையில் நடந்து கொள்வதில்லை, லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்ததால், இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்திருந்தது.

  போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் போலீசார் தவறு செய்வது, லஞ்சம் கேட்பது தவிர்க்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விதிமுறை மீறினால் நடவடிக்கை

போலீஸ் நிலையங்களில் நடைபெறும் தவறுகளை தடுக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு வேலை போலீசார் தவறு செய்திருப்பது தெரியவந்தால், அதற்கான ஆதாரங்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தால், விசாரணைக்கு உதவியாக இருக்கும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களில் விதிமுறை மீறி நடக்கும் போலீசார் மீது நடவடிககை எடுப்பது உறுதி. 

பொதுமக்களும் போலீஸ் நிலையங்களுக்கு சென்று போலீசாரிடம் அத்துமீறி நடப்பது கண்காணிப்பு கேமராவில்பதிவாகி இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. (நிர்வாகம்) சலீம் தெரிவித்துள்ளார்.

Next Story