பெங்களூருவில் வீடுகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா சாலை தெரியும்படி அமைக்க வேண்டும் - போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அறிவுரை
பெங்களூருவில் வீடுகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்களை சாலைகள் தெரியும்படி இருக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அறிவுரை வழங்கி உள்ளார்.
பெங்களூரு:
கமல்பந்த் அறிவுரை
பெங்களூரு எலகங்கா போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற பொதுமக்களின் குறை கேட்கும் நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களுக்கும், தங்களது வீட்டுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி கொள்வது குறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் சில அறிவுரைகளை வழங்கினார். பின்னர் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேசியதாவது:-
பொதுமக்கள் தங்களது வீட்டை பாதுகாத்து கொள்ளும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அவ்வாறு கேமராக்களை பொருத்தினாலும், அதுபோலீசாருக்கும் உதவி அளிக்கும்படி இருக்க வேண்டும்.
சாலைகள் தெரியும் விதமாக...
இதற்காக பொதுமக்கள் தங்களது வீடுகளில் பொருத்தும் கேமராவை, வீட்டுக்கு முன்பாக இருக்கும் சாலைகள், பிற பகுதியில் தெரியும் விதமாக அமைக்க வேண்டும். அப்போது தான் அந்த சாலையில் ஏதேனும் குற்றங்கள் நடந்திருந்தால், அதில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய போலீசாருக்கு உதவியாக இருக்கும். உங்களது வீட்டுக்கும் கேமரா பொருத்துவதன் மூலம் பாதுகாப்பாக இருக்கும். கேமரா இருப்பதை பார்த்து குற்றங்களில் ஈடுபட பயப்படுகிறார்கள்.
எலகங்கா என்.இ.எஸ். சிக்னல் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுவது பற்றி எனது கவனத்திற்கும் வந்துள்ளது. இதுபற்றி போக்குவரத்து இணை கமிஷனருடன் ஆலோசித்து சரியான நடவடிக்கை எடுக்கப்படும். எலகங்கா சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வது அதிகரித்து வருவதாக புகார்கள் வருகிறது. சாகசத்தில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கமல்பந்த் கூறினார்.
Related Tags :
Next Story