நண்பர்களுடன் குளித்த போது சேற்றில் சிக்கி 40 அடி கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு


நண்பர்களுடன் குளித்த போது சேற்றில் சிக்கி 40 அடி கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 28 Feb 2022 7:23 PM IST (Updated: 28 Feb 2022 7:23 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே நண்பர்களுடன் 40 அடி கிணற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 5 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரது உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

கிணற்றில் குளித்தார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆமூரை சேர்ந்த தரணி என்பவரின் மகன் கரண் (வயது 22). இவர், தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்திற்கு நேற்று வந்த கரண், அங்குள்ள நண்பர் ஹேமந்த் (22) உள்பட மேலும் 3 பேர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத தனியாருக்கு சொந்தமான சுமார் 40 அடி ஆழம் கொண்ட தரைமட்ட கிணற்றில் குளித்தார்.

இதில் தண்ணீரில் உள்ள சேற்றில் சிக்கிய கரண், கிணற்றுக்குள் உள்ளே இழுக்கப்பட்டார்.

வாலிபர் உடல் மீட்பு

இது குறித்து தகவலறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கிராம மக்களின் உதவியோடு 3 மோட்டார்கள் வைத்து கிணற்றில் உள்ள தண்ணீரை பெரும்பாலும் வெளியேற்றினர். பின்னர், 5 மணி நேர தொடர் தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று இரவு 8 மணியளவில், அந்த கிணற்றில் இருந்து வாலிபர் கரணின் உடலை தீயணைப்புத்துறையினர் வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story