அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை குறித்து காலம் முடிவு செய்யும்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை குறித்து காலம் முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை பிடித்து போலீசில் ஒப்படைத்து, ஜனநாயக கடமையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தது சட்ட விேராதம் ஆகும். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். இதுபோன்ற பொய் வழக்குகள், மிரட்டல்கள் மூலம் அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களிலும் இதுபோல பல மிரட்டல்களை சந்தித்து உள்ளோம். எனவே, அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.
தற்போது அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை உள்ளது. இதனை தொண்டர்கள் ஏற்றுள்ளார்கள். ஒற்றை தலைமை என்று முடிவு செய்து தலைமை அறிவித்தால், அதனையும் தொண்டர்கள் ஏற்பார்கள்.
தற்போது அ.தி.மு.க. இரட்டை தலைமையில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையாக பணி செய்து வருகிறோம். இதில் எந்த குழப்பமும் இல்லை. எனவே, அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை குறித்து காலம் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story